சீனாவில் ஏமாற்று மாரத்தான் - 30 பேர் சான்றிதழ் பறிப்பு
31.01.2010

சீனாவில் சமீபத்தில் நடந்த நீண்டதூர ஓட்டப் போட்டியில் வெற்றிக்கோட்டை முதலில் தொட்ட 100 பேரில் 30 பேருக்கு மேல் ஏமாற்றியது தெரியவந்ததால், அவர்களுக்கு தரப்பட்ட சான்றிதழ் திரும்ப பெறப்பட்டுள்ளது. சீனாவில் ஆண்டுதோறும் ஷியாமென் சர்வதேச மாரத்தான் ஓட்டப் போட்டி’ நடந்து வருகிறது. இவ்வருட போட்டி சமீபத்தில் நடந்து. இதில் உலக நாடுகளைச் சேர்ந்த 50 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். ஓட்ட தூரமான 26 கிலோ மீட்டரை நூற்றுக்கணக்கானவர்கள் கடந்தனர். ஆனாலும் முதல் 100 பேர் தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட நாயகர்கள். இவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஓட்டப் போட்டியை விடியோவில் பார்த்தபோதுதான் பலரும் தகிடுதத்தம் செய்து வெற்றி பெற்றது தெரியவந்தது. விடியோ காட்சியில் ஓரிடத்தில் இருந்தவர் அடுத்ததடுத்த சில, பல கிலோ மீட்டர் தூரங்களில் காணாமல் போயிருந்தார். அப்படி காணாமல் போனவர்கள் குறிப்பிட்ட தூரத்தை காரில் கடந்துவிட்டு பிறகு சாலையில் இறங்கி ஓடி முடித்தது தெரிய வந்துள்ளது. இப்படி ஏமாற்றி, தகிடுதத்தம் செய்ததாக 30 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் தகுதி இழப்பு அடைவதாக போட்டியை நடத்திய ஃப்யூஜியன் நகர விளையாட்டு அமைப்பு கூறியுள்ளது.
இந்தப் போட்டியில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலோர் மாணவர்கள். இவர்களில் பலர் தான் இப்படி ஏமாற்றியுள்ளனர். காரணம், சீன பல்கலைக்கழகங்களில் சேர நடக்கவிருக்கும் ‘கவோகாவோ’ என்ற நுழைவுத் தேர்வுதான். இந்த நுழைவுத் தேர்வு கடுமையாக இருக்கும். ஷியாமென் மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு 26 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி 34 நிமிடங்களில் கடந்து, வெற்றி பெற்று வருபவர்களுக்கு, இந்த நுழைவுத் தேர்வில் கூடுதலாக 2 மதிப்பெண்கள் தரப்படுமாம். இந்த 2 மதிப்பெண்களைப் பெறத்தான் மாணவர்கள் ஓடி ஓடி ஏமாற்றியிருக்கிறார்கள்.