விரைவில் ஆன்லைன் புகார் வசதி அறிமுகம் - டிராய்
28.01.2010
இந்தியாவில் தற்போது 50 கோடி செல்போன் உபயோகிப்பாளர்கள் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு சேவை அளிக்கும் செல்போன் நிறுவனங்கள் தொடர்பான புகாரை நேரடியாக அளிப்பதற்கு வசதியாக ஆன்லைன் குறைகேட்பு முறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
இதன்படி எந்த ஒரு வாடிக்கையாளரும் தாங்கள் தெரிவிக்க வேண்டிய புகாரை டிராய் இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்யலாம். செல்போன் சேவை அளிக்கும் நிறுவனத்தால் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட விஷயங்களை புகாராகப் பதிவு செய்யலாம். இவ்விதம் பதிவு செய்யப்படும் புகாருக்கு உரிய பதிலையும் வாடிக்கையாளர் பெறும் வகையில் இப்புதிய முறை செயல்படும். அத்துடன் குறை தெரிவித்த வாடிக்கையாளரின் குறையை சம்பந்தப்பட்ட நிறுவனம் தீர்த்து வைத்துள்ளதா என்பதையும் டிராய் கண்காணிக்கும். அத்துடன் வாடிக்கையாளரின் குறை எந்த அளவுக்குத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது என்பதும் ஆராயப்படும் என்று டிராய் அதிகாரிகள் தெரிவித்தனர்.
செல்போன் உபயோகிப்பவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் மட்டுமே இணையதளம் மூலம் புகார் தெரிவிக்க இயலும். இதைக் கருத்தில் கொண்டு எஸ்எம்எஸ் மூலம் புகார் தெரிவிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் குரல் வழி புகாரை பதிவு செய்வதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆன்லைன் மூலம் புகார் தெரிவிக்கும் முறை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. பொதுவாக வாடிக்கையாளரின் குறைகளைத் தீர்க்க மூன்றடுக்கு முறையை டிராய் வகுத்துள்ளது. அழைப்பு மையம் (கால் சென்ட்டர்), பகுதி வாரியாக குறைகேட்பு அதிகாரி நியமனம், உயர்நிலை அதிகாரிகள் என்ற அடிப்படையில் குறைகள் தீர்க்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது. ஆனால் தற்போது வாடிக்கையாளர்கள் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு பெற நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் மட்டுமே உள்ளது.