PAYPAL நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி தடை
15.02.2010
ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை நடத்தும் பே பால் (pay pal) நிறுவனத்துக்கு இந்தியாவில் தடை விதித்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி. ஆன் லைன் மூலம் பணம் பரிவர்த்தனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனம் பே பால். அமெரிக்க நிறுவனம் இது.
இந்திய சட்டப்படி, நாட்டில் இதுபோன்ற பரிவர்த்தனையில் இறங்கும் நிறுவனம் ரிசர்வ் வங்கியில் பதிவு பெற்றதாக இருக்க வேண்டும். ஆனால் பே பால் இன்னும் ரிசர்வ் வங்கியில் தன்னைப் பதிவு செய்து கொள்ளவில்லை. எனவே உடனடியாக இந்தியாவில் அனைத்து நடவடிக்கைகளையும் பே பால் நிறுத்திக் கொள்ள வேண்டும். மீறித் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரிசர்வ் வங்கி நேரடியாக எச்சரித்துள்ளது.
அதே நேரம், ரிசர்வ் வங்கியின் அனுமதி மற்றும் உரிமம் பெற்றுக் கொண்டால் பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகளைத் தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கணிசமானோர் இணைய வழி பணப் பரிவர்த்தனைக்கு பே பால் நிறுவனத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதால், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.