RSS Feed  

தினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்


Eat egg everyday
அடியக்கமங்கலம், 29.06.2015: தினமும் முட்டை சாப்பிடுவது சரியா என்று சிலருக்குத் தயக்கம் இருக்கும். ஆனால் தினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம் என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். குறிப்பாக, வளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் ஏ, பி, சி, டி, இ என்று உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் முட்டையில் உண்டு. மேலும், தைராக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் உண்டு.

உடற்பயிற்சியில் நாட்டமுள்ள ஆண்கள், தினமும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் அவர்கள் தினமும் பல முட்டைகளைச் சாப்பிட்டாலும் அவர்களுக்கு எவ்விதப் பிரச்சினையும் ஏற்படாது. தசைகளின் வலிமைக்கு புரதம் அவசியம். முட்டையின் வெள்ளைக்கருவில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாகவே 'பாடி பில்டிங்' பயிற்சியை மேற்கொள்பவர்கள் அடுக்கடுக்காக முட்டைகளை பச்சையாகவே உடைத்துக் குடிக்கிறார்கள்.

ஓரிடத்திலேயே அமர்ந்து வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொண்டாலே போதும். உடல் உழைப்பு அதிகமுள்ள வேலைகளில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முட்டை சாப்பிடலாம். பொதுவாக முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 முட்டைகள் வரை சாப்பிடலாம்.

மஞ்சள் கருவை சாப்பிடுவதாக இருந்தால், தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும். இரவு நேரத்தில் முட்டை சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், தூங்கப்போவதற்கு 2 மணி நேரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். மஞ்சள் கருவையும் சேர்த்து முட்டைகளை அதிகமாகச் சாப்பிடுபவர்களின் உடலில் கொழுப்புச் சத்து அளவு அதிகமாகி, இதய நோய்கள் வரக்கூடும். தேவையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு அதன் பின்னர் முட்டை சாப்பிடுவது உடல் வலிமையை கூட்டும்.

முட்டையை அதிக நேரம் சமைக்கக் கூடாது. முட்டையை மிக அதிக நேரம் கடாயில் போட்டு வறுத்தால் ஒருவித வாசனை வரும், முட்டை அதன் இயற்கைத் தன்மையை இழந்துவிடும். முட்டையை தண்ணீரில் போட்டு அவித்துச் சாப்பிடுவதே ஆரோக்கியமானது. காய்கறிகளை நறுக்கிப்போட்டு, அதில் முட்டையை உடைத்து ஊற்றி ஆம்லெட் தயாரித்தும் சாப்பிடலாம். முட்டையில் இருக்கும் புரதங்களை உடல் எளிதாக ஏற்றுக்கொள்ளும். எனவே, தயங்காமல் முட்டை சாப்பிடலாம்.

American Craft Works




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed