RSS Feed  

வெளிநாடு சென்று பணியாற்றுபவர்கள் குறித்து புதிய ஆய்வு


The new study about working abroad
அடியக்கமங்கலம், 19.04.2015: லயோலா கல்லூரியின் சமூகவியல் பயிற்சி ஆய்வு மையமும், திருவனந்தபுரம் சென்டர் ஃபார் டெவலப்மெண்டல் ஸ்டடீஸ், மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இன்டர்நேஷனல் மைக்ரேஷன் ஃப்ரம் தமிழ்நாடு என்ற ஆய்வை மேற்கொண்டுள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் முதற்கட்ட முடிவுகளின்படி, இப்படி வெளிநாடுகளில் வசிப்பவர்களின் மூலம் தமிழகத்திற்கு மட்டும் 2013ஆம் ஆண்டில் சுமார் 59,000 கோடி ரூபாய் அளவுக்கு பணம் அனுப்பட்டுள்ளது.

100 வீடுகளுக்கு 3 வீட்டில், வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்கள் வசிக்கிறார்கள் என்கிறார் இந்த ஆய்வின் இயக்குனரான டாக்டர் இருதய ராஜன். இது ஆரம்பகட்ட கருத்துக் கணிப்பு என்பதால், தமிழகம் முழுவதும் 17 மாவட்டங்களில் சுமார் 9,300 குடும்பங்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் கிடைத்த விவரங்களே தற்போது அளிக்கப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக தமிழகத்திலிருந்து எவ்வளவு பேர் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள் என்பது குறித்து யாரிடமும் தகவல் இல்லை என்கிறார் இருதய ராஜன்.

இந்தியாவிலிருந்து செல்பவர்கள் அதிக அளவில் சிங்கப்பூருக்குச் செல்வதாகவே இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. 21 சதவீதம் பேர் அந்நாட்டில் வேலைபார்க்கின்றனர். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், கத்தார், பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகளுக்குத்தான் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் சென்றுள்ளனர்.

தமிழகத்திலிருந்து வெளியேறுபவர்களில் படித்தவர்களின் சதவீதம் அதிகம் இருப்பது கவலையளிக்கும் அம்சம் என்கிறார் இருதய ராஜன். சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவிலிருந்துதான் அதிகம் பேர் வெளிநாட்டில் வசித்த நிலையில், தற்போது அந்த இடத்தை உத்தரப்பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்கள் எடுத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன. இது தொடர்பான முழுமையான ஆய்வு முடிவுகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்படுமென கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடு சென்று வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அப்போதுதான் தெரியவரும். இந்த ஆய்விற்கு தமிழக அரசு 24 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

கேரளா இதுவரை ஆறுமுறை இதுபோன்ற ஆய்வுகளை நடத்தியிருக்கிறது. குஜராத் இரண்டு முறையும் கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ஒரு முறையும் இதுபோன்ற ஆய்வைச் செய்திருக்கின்றன. இதுபோன்ற ஆய்வுகளைச் செய்வதன் மூலம் வெளிநாடு சென்று வேலை பார்த்து, பெரும் அளவில் அன்னியச் செலாவணியை ஈட்டிக்கொடுப்பவர்களுக்கு சில சலுகைகளை பெற்றுத்தர முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Dubai Furnitures




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed